இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு தரக்குறியீடான குமாரிகா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இயற்கையான கூந்தல் மூலமான சிகைகளின் தேவையை அதிகரிப்பதனை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. ஒவ்வொரு பெண்ணும், அவரவர் தோற்றத்தைப் பொருட்படுத்தாமல் அழகாக இருக்க வேண்டும் எனும் கருத்தியலை பிரசாரம் செய்ய விரும்பும் குமாரிகா, அதன் உரிய தருணத்திலான மற்றுமொரு முயற்சியின் தொடக்கமான, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, இயற்கையான கூந்தல் மூலமான சிகைகளை அன்பளிப்பாக வழங்கும் ‘சொந்துரு திரியவந்தி’ (அழகினால் தைரியமாக்கப்படுபவள்) தேசிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. குமாரிகா அதன் பங்குதாரர்களான, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் அலுத்கம, பெந்தோட்டை மற்றும் கல்கிஸ்ஸை லயன்ஸ் கிளப்புகளுடன், இலங்கை புற்றுநோயியல் நிபுணர்களின் கல்லூரியின் ஒருங்கிணைப்பு ஆதரவுடன் இந்த முயற்சியைத் ஆரம்பித்துள்ளது.
ஒன்லைன் மூலம் இடம்பெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில், சுகாதார அமைச்சின் செயலாளர் – சஞ்சீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, இலங்கை புற்றுநோயியல் நிபுணர்களின் கல்லூரியின் செயலாளர் – வைத்தியர் டாக்டர் சச்சினி மலவியாராச்சி, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் – வைத்தியர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க, மாவட்ட முன்னாள் லயன் ஆளுநர் சாந்தனி விதான மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிர்வாக பணிப்பாளர்/குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அனைத்து நிலைகளிலும் பெண்களின் அழகைக் கொண்டாடும் அதே வேளையில், கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் கோரிக்கை விடுக்குமிடத்து, ஒரு பராமரிப்பு பொதியொன்றை நன்கொடையாக அளிப்பதே இப்பிரசாரத்தின் நோக்கமாகும். கீமோதெரபியின் ஆரம்பத்திலேயே நோயாளிகளுக்கு இந்த பராமரிப்பு பொதி விநியோகிக்கப்படும். பொதுவாக கீமோதெரபி ஆரம்பித்து இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் கூந்தல் உதிர்வதால், தயார் நிலையிலுள்ள சிகையை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். இந்த பராமரிப்பு பொதியில், அளவுக்கேற்ப சரிசெய்யக்கூடிய பட்டி கொண்டதும் தோள்பட்டை வரை நீளத்துடனான இயற்கையான கூந்தலைக் கொண்ட சிகை, குமாரிகா ஷம்பூ மற்றும் கண்டிஷனர், குமாரிகா ஹெயார் சேரம், குமாரிகா ஹெயார் ஒயில் மற்றும் புற்றுநோயாளிகளுக்கான முக்கியமான வழிகாட்டல்கள் அடங்கிய ஒரு கையேடு ஆகியன அடங்குகின்றன.
இப்பிரசார நடவடிக்கையின் முதல் கட்டமாக, மஹரகம – தேசிய புற்றுநோய் நிறுவனம், ராகமை – போதனா வைத்தியசாலை, கண்டி – தேசிய வைத்தியசாலை, பதுளை – மாகாண பொது வைத்தியசாலை, கராப்பிட்டி – போதனா வைத்தியசாலை, குருணாகல், போதனா வைத்தியசாலை, அநுராதபுரம் – போதனா வைத்தியசாலை, கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவமனை, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாகாண வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளிலுள்ள புற்றுநோயாளிகளுக்கு இப்பராமரிப்புப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. வருடாந்தம் சுமார் 30,000 நோயாளர்கள் புற்றுநோய்க்கு உள்ளாவதாக தகவல்கள் தெரிவிப்பதோடு, அவர்களில் பெண்கள் தொகை 15,500 ஆக பதிவாகின்றது. அந்த வகையில் இத்தேசிய திட்டத்தின் மூலம் வருடாந்தம் சுமார் 6,000 சிகைகளை நன்கொடையாக வழங்க எதிர்பார்க்கப்படுவதுடன், இது புற்று நோய்க்குள்ளாகும் பெண்கள் தொகையின் அரைவாசியாகும்.
இந்த நன்கொடையானது, நோயாளிகளின் கூந்தல் தேவையை நிவர்த்தி செய்ய உதவுவதுடன், இப்பிரச்சாரத்தில் நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் நம்பிக்கையை ஊக்குவிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலமாக அவர்களை மன ரீதியாக கைகொடுப்பதற்குமாக, அவர்களுக்கான ஆலோசனை வழங்கும் அமர்வுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. சுமார் 80% புற்றுநோயாளிகள் கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தற்காலிக முடி உதிர்வு பக்க விளைவைக் கொண்டிருக்கிறது. புற்றுநோய் கண்டறியப்பட்ட பெரும்பாலான பெண்கள் முடி உதிர்தல் காரணமாக பாதிப்பான சூழ்நிலைகளை எதிர்கொள்வதோடு, இது அவர்கள் தங்களுக்கு ஆறுதலளிக்கும் எல்லைகளிலிருந்து விலகிச் செல்ல காரணமாகவும் அமைகின்றது. பெரும்பாலான பெண்கள் சிகிச்சைக்குத் தயாராக இருந்தாலும், முடி உதிர்தல் கருதி அவர்கள் சற்று தயக்கத்திற்குள்ளாகின்றனர். சமூக தொடர்பை பேணுவது, உறவினர்களோடு பழகுவது, வழிபாட்டுத் தலங்கள் போன்ற பல்வேறு விடயங்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் வெட்கப்படுகிறார்கள். சமூகம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மாறுபட்ட பார்வை அவர்களுக்குள் ஒரு மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இவ்வாறான பெண்கள் இவற்றை கடந்து முன்னோக்கி செல்வதற்கு ஆதரவளிப்பதன் அவசியத்தை புரிந்த, ‘சொந்துரு திரியவந்தி’ திட்டமானது, சிகைகளின் தானம் மற்றும் விழிப்புணர்வு முயற்சிகளை நாடு முழுவதும் தொடர்ந்தும் விரிவுபடுத்தும்.
புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவு காரணமாக உதிரும் கூந்தல் காரணமாக, எழுந்துள்ள சிகைகளின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும், கூந்தல் இழப்பின் பின்னர் ஏற்படும் மன ரீதியான அழுத்தம் மற்றும் சமூக பாதிப்புகளின் முன்பாக, ஆத்ம தைரியத்துடன் இருப்பதை ஊக்குவிப்பதற்கும், பெண்களை தைரியப்படுத்துவதற்குமான நோக்கத்துடன், இத்திட்டத்தை குமாரிகா ஆரம்பித்துள்ளது.
இந்நிகழ்வு தொடர்பில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கையிலுள்ள புற்று நோயாளிகளின் நலன் கருதி, உரிய தருணத்தில் பங்களிப்பு வழங்கியுள்ள ஹேமாஸ் கன்சியூமர் நிறுவனத்திற்கும் அதன் பங்குதாரர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்நோயாளர்களில் பெரும்பாலானோர் தாங்கள் இழந்த தலைமுடிக்கு ஒத்த மாற்றீட்டை விரும்பினாலும் இயற்கையான கூந்தலை கொள்வனவு செய்யும் நிலையில் அவர்கள் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களை மகிழ்விக்க ஏதாவது செய்ய முடியும் என்றால், நாம் அதை இரு கரமேந்தி தாராளமாக செய்ய முன்வர வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை புற்றுநோயியல் நிபுணர்களின் கல்லூரியின் செயலாளர் – வைத்தியர் டாக்டர் சச்சினி மலவியாராச்சி, அனைத்து தரப்பினரும் இந்த சரியான நேரத்தில் எடுத்த முயற்சியை பாராட்டியதோடு, திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
‘சொந்துரு திரியவந்தி’ பிரசாரம் குறித்து, ஹேமாஸ் ஹோல்டிங்ஸின் நிர்வாக பணிப்பாளர்/குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி – கஸ்தூரி செல்லராஜா வில்சன் தெரிவிக்கையில், “புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தைரியமும் உறுதியும் அவசியம். இந்த அழகான மற்றும் தைரியமான பெண்கள், இச்சவாலான பயணத்தை மேற்கொள்ளும்போது, அவர்கள் தங்களைப் பற்றி நல்ல விதத்தில் உணர வேண்டியது அவசியமாகும். ஹேமாஸ் ஆகிய நாம், நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களிலும் எமது சமூகத்திலுள்ளவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதே எமது இதயத்தில் உள்ள விடயமாகும். எனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களை அணுகி அவர்கள் சந்தித்துள்ள போராட்டத்தின் ஒரு சிறிய பகுதியை எதிர்கொள்வதற்கு உதவுவதை நாம் பெரும் பாக்கியமாக கருதுகிறோம்.” என்றார்.
இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் வைத்தியர் லங்கா ஜயசூரிய திஸாநாயக்க கருத்து வெளியிடுகையில், “அதிகரித்து வரும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையானது துரதிஷ்டவசமானது என்பதுடன், தற்போது அது ஒரு தீவிர பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நோயின் காரணமான மன உளைச்சல், சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு விடயமாகும். பல பெண்கள் முடி உதிர்தல் கவலையுடன் போராட வேண்டியுள்ளதால், அது அவர்களுக்கு மிகவும் சவாலான காலமாக அமைகின்றது. இது அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக அமைகின்றது. இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் சார்பாக, இந்த தேசிய ரீதியிலான முயற்சியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உயிர்ப்பிக்க முடிந்தமை தொடர்பில் அதன் ஒரு பங்காளர் எனும் வகையில் உண்மையிலேயே நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.” என்றார்.
பெந்தோட்டை, அலுத்கம லயன்ஸ் கிளப்புகளின் மாவட்ட முன்னாள் லயன் ஆளுநர் சாந்தனி விதான தனது கருத்தை தெரிவிக்கையில், “‘எங்கு தேவை உள்ளதோ அங்கே லயன் இருக்கும்’ எனும் எமது தாரக மந்திரத்திற்கேற்ப, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் முக்கிய தேவை தொடர்பான இந்த தேசிய பிரசாரத்தில் பங்கெடுத்தமை தொடர்பில் நாமும் உண்மையில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த உரிய தருணத்திலான நன்கொடை அவர்களின் கரங்களை வலுப்படுத்துமென நாம் நம்புவதோடு, அவர்கள் தங்கள் மீதான நம்பிக்கையை வளர்த்து, தங்கள் குடும்பங்களுடனும் சமுதாயத்திலும், அவர்களுக்குரிய இடத்தை பெற்று ஒரு சாதாரணமானதும், மகிழ்ச்சியானதுமான வாழ்க்கையை வாழ இது அவர்களுக்கு உதவும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.
Hemas Consumer தயாரிப்பான குமாரிகா ஆனது, கூந்தல் பராமரிப்பு தொடர்பான உண்மையான இலங்கை தரக்குறியீடாகும். இது இலங்கையர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கான நோக்கத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் தொடர்பான ஹேமாஸின் பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. குமாரிகா, இலங்கை பெண்கள் அழகாகவும், தைரியமான மற்றும் வலிமையான பெண்களின் தலைமுறையாளர்களாக உருவாவதற்கும் முன்னுரிமை அளிக்கிறது. வாழ்க்கையின் சவால்களை வலுவாக எதிர்கொள்ள தகுதியுள்ள பெண்களை, மேலும் வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பங்காளராக இருக்க, அனைத்து இலங்கையர்களுக்கும் குமாரிகா அழைப்பு விடுக்கிறது.
Photo Caption:
இடமிருந்து வலமாக, Hemas consumer நிறுவன சந்தைப்படுத்தல் முகாமையாளர் – திருமதி அஸ்மாரா மனான் பெரேரா, சுகாதார அமைச்சின் செயலாளர் – வைத்தியர் சஞ்சீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் – வைத்தியர் அசேல குணவர்தன மற்றும் முதலாவது குமாரிகா பராமரிப்புப் பொதியைப் பெற்ற திருமதி. சுதேசிகா சந்தமாலி.
Comment here